Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டி பிரிவு நீங்கலாக உள்ள அனைத்து நிலை ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் இந்த பொது கலந்தாய்வில் பங்கேற்று பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், மண்டல அளவிலான கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பணியிட மாறுதல் கோரும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் இன்று முதல் வரும் ஜூலை 24-ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக www.nonteaching.dcetransfer.in என்ற பிரத்யேக இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறும் கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b