Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த நான்கு நாட்களாக தனது மனைவியை காணவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட நபர் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் என்கிற இசை செல்வகுமார், புகாரை முறையாக பெற்றுக்கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மனைவியை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்ற மன உளைச்சலில் இருந்த கணவர், காவல்துறையினரும் புகாரை ஏற்க மறுத்ததால் மனமுடைந்து தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதன் விளைவாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். முதற்கட்ட விசாரணையில், புகாரை வாங்க மறுத்து அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b