பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம் - சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
சென்னை, 15 ஜூலை (ஹி.ச) தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களைக் கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகி
பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம் - சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை


சென்னை, 15 ஜூலை (ஹி.ச)

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களைக் கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2-ம் தேதி தொடங்கி துறைவாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதன் ஒரு பகுதியாக, இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறைக்கான புதிய திட்டங்கள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருந்துகள் இருப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை, புதிய விளையாட்டு அரங்குகள் அமைத்தல் மற்றும் வரவிருக்கும் பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b