கோவை புதூரில் காமராஜர் பிறந்த நாள் விழா - 124 மாணவர்கள் இணைந்து 430 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம்
கோவை, 15 ஜூலை (ஹி.ச.) கோவை மாவட்டம், கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக, 124 மாணவர்கள் இணைந்து 430 சதுர அடி பரப்பளவ
கோவை


கோவை, 15 ஜூலை (ஹி.ச.)

கோவை மாவட்டம், கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் சிறப்பம்சமாக, 124 மாணவர்கள் இணைந்து 430 சதுர அடி பரப்பளவில் காமராஜரின் பிரம்மாண்ட ஓவியத்தை உருவாக்கி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

விழாவில் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குநர் கவுரி உதயேந்திரன், செயலாளர் ரவிக்குமார், முதல்வர் சரண்யா, வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குநர் சவுந்தர்யா உள்ளிட்டோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 124 மாணவர்கள் தலா ஒரு வெள்ளை அட்டையில் காமராஜரின் உருவப்படத்தின் ஒரு பகுதியை வரைந்தனர்.

பின்னர் அனைத்து ஓவியங்களையும் ஒன்றிணைத்து, 430 சதுர அடி பரப்பளவில் காமராஜரின் முழு உருவப்படத்தை உருவாக்கி காட்சிப்படுத்தினர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் காமராஜர் வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்களின் ஒருங்கிணைப்பு, துல்லியம் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்திய இந்த மெகா ஓவியம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. பள்ளி வளாகத்தின் மேலிருந்து ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், காமராஜரின் உருவம் மிக நேர்த்தியாக வெளிப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P