இன்று காமராஜரின் 124 ஆவது பிறந்தநாள் - மலர் தூவி முதல்வர் விஜய் மரியாதை
சென்னை, 15 ஜூலை (ஹி.ச) தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கல்விக் கண் திறந்த கர்மவீரருமான பெருந்தலைவர் கு. காமராஜரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 15-ம் தேதி ) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் நேர்மைக்கும், எளிமைக்கும்
இன்று காமராஜரின் 124 ஆவது பிறந்தநாள் - மலர் தூவி முதல்வர் விஜய் மரியாதை


சென்னை, 15 ஜூலை (ஹி.ச)

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கல்விக் கண் திறந்த கர்மவீரருமான பெருந்தலைவர் கு. காமராஜரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 15-ம் தேதி ) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக அரசியலில் நேர்மைக்கும், எளிமைக்கும், தன்னலமற்ற பொதுச் சேவைக்கும் அடையாளமாக திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். 1903-ம் ஆண்டு விருதுநகரில் பிறந்த இவர், தனது ஆட்சிக் காலத்தில் இலவச மதிய உணவுத் திட்டம், பள்ளிகள் திறப்பு, அணைகள் கட்டுதல், தொழிற்சாலைகளை உருவாக்குதல் என தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தியவர். பதவி, அதிகாரம் என எதற்கும் ஆசைப்படாமல் கடைசி வரை பொது வாழ்க்கையில் நேர்மையுடன் வாழ்ந்த அவரது வாழ்க்கை இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாகும்.

முதல்வர் விஜய், காமராஜரின் வழியில் நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவதே தனது இலக்கு என பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் காமராஜர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை நிகழ்வுகளுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்லத்தில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள காமராஜரின் படத்திற்கு தமிழக முதல்வர் விஜய் இன்று காலை 10 மணி அளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஐந்து பெரும் கொள்கை தகவல்களில் காமராஜரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் முதல்வரோடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ரமணன் மற்றும் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும் காமராஜரின் தியாகத்தையும், சேவையையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b