Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
வடசென்னையின் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற காசிமேடு மீனவர்களின் 8 விசைப்படகுகளை, ஆந்திர மாநில மீன்வளத் துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் சுமார் 20 நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, சென்னை மீன்வளத் துறை அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் நூர்ஜகான் மற்றும் ராயபுரம் காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தம் தலைமையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தாலும், அதற்கான உறுதியான தேதி எதையும் குறிப்பிடவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அதிருப்தியடைந்த மீனவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 8 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க தமிழக அரசு மற்றும் மீன்வளத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P