மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் காரை மீனவர்கள் முற்றுகை - மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மீனவரால் பரபரப்பு
சென்னை, 15 ஜூலை (ஹி.ச.) வடசென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்வளத் துறை சார்பில் நடைபெற்ற மீனவர்களுக்கான மருத்துவ முகாமில் அமைச்சர் ஸ்ரீநாத் இன்று பங்கேற்றார். மருத்துவ முகாமில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் அம
அமைச்சர் ஶ்ரீநாத்


சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)

வடசென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்வளத் துறை சார்பில் நடைபெற்ற மீனவர்களுக்கான மருத்துவ முகாமில் அமைச்சர் ஸ்ரீநாத் இன்று பங்கேற்றார்.

மருத்துவ முகாமில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் காரில் புறப்பட முயன்றபோது, அங்கிருந்த மீனவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காரை முற்றுகையிட்டனர்.

அப்போது கோகுல் என்ற மீனவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து தடுத்தனர்.

இதையடுத்து, அமைச்சர் காரில் ஏறிச் சென்றபோதும் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த முயன்றனர். ஆனால் அமைச்சர் கார் நிற்காமல் சென்றதாகக் கூறி ஆத்திரமடைந்த அவர்கள் முழக்கமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் கோகுல்,

என்னுடன் தொடர்புடைய 8 விசைப்படகுகள் ஆந்திராவில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு 25 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பலமுறை மனு மற்றும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடன் சுமையில் தவித்து வருகிறோம்.

இந்த நிலை தொடர்ந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படி ஏதேனும் நடந்தால், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதைப் போல எங்கள் குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உருக்கமாக தெரிவித்தார்.

அமைச்சரின் காரை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam