கெலவரப்பள்ளி அணை நுரை மாசு- மத்திய, தமிழ்நாடு, கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செப் 9-ல் நேரில் ஆஜராக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
தமிழ்நாடு, 15 ஜூலை (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையில் மீண்டும் நுரை பொங்கி மாசு ஏற்பட்டுள்ள விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்
பசுமை தீர்ப்பாயம்


தமிழ்நாடு, 15 ஜூலை (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையில் மீண்டும் நுரை பொங்கி மாசு ஏற்பட்டுள்ள விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த வழக்கில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) மண்டல இயக்குநர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மற்றும் கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர்கள் ஆகியோர் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மாசுபாட்டைத் தடுக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணைந்து செயல்பட்டு, நடைமுறையில் அமல்படுத்தக்கூடிய நிரந்தர தீர்வுகளை வகுத்து, கூட்டு செயல் திட்டத்தை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் பெய்த கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரில் வெண்நுரை அதிகளவில் காணப்பட்டது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், பெங்களூருவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரே நுரை உருவாவதற்கான முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தினமும் உருவாகும் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்கும் வசதி இல்லாததால், இந்த பிரச்சினை நீடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாடு காரணமாக நீர்தரத்தில் அமோனியா, பாஸ்பேட், நைட்ரஜன் மற்றும் மலக் கிருமிகளின் அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆற்றின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இரு மாநிலங்களும் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam