கேரளத்தில் சிறையில் பதவிப்பிரமாணம் எடுத்த பா.ஜ.க. கவுன்சிலர்
திருவனந்தபுரம் , 15 ஜூலை (ஹி.ச.) கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு, திருவனந்தபுரம் மாநகராட்சியின் 20 பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையின்படி உறுதிமொழி ஏற
A


திருவனந்தபுரம் , 15 ஜூலை (ஹி.ச.)

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு, திருவனந்தபுரம் மாநகராட்சியின் 20 பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அப்போது அவர்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையின்படி உறுதிமொழி ஏற்காமல், உள்ளூர் இந்து தெய்வங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு பதவிப்பிரமாணம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம்,

அந்த பதவிப்பிரமாணம் சட்டப்படி செல்லாது என்றும், சம்பந்தப்பட்ட 20 கவுன்சிலர்களும் மீண்டும் முறையாக உறுதிமொழி ஏற்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த 20 பேரில் ஒருவரான சுகதன், கொலை முயற்சி உள்ளிட்ட இரண்டு குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர்.

ஜாமீன் பெற்றிருந்த போதிலும், கேரள சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர் விய்யூர் மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் சிறையிலேயே பதவிப்பிரமாணம் செய்து கொள்ள அனுமதி கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், சிறையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள அனுமதி வழங்கியது.

இதையடுத்து, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ராஜேஷ், விய்யூர் மத்திய சிறைக்குச் சென்று, அங்குள்ள நூலகத்தில் சிறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சுகதனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது அவர் விதிகளின்படி கடவுளின் பெயரில் உறுதிமொழி ஏற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கேரளத்தில் சிறையில் இருக்கும் ஒரு உள்ளாட்சி மக்கள் பிரதிநிதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA