Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 15 ஜூலை (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் காய்கறி வியாபாரி ஒருவர் படுகாயமடைந்து சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதும், சாலையோரங்களில் கட்டிவிடப்படுவதும் தொடர்ந்து விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகே செல்லாண்டி நகர் பகுதியில் பெங்களூரு நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோர பேரிகார்டில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மீது, கடந்த 12-ஆம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிகானப்பள்ளி கீழ்புதூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சண்முகம் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சண்முகம் முதலில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நிகழ்ந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் மற்றும் சாலையோரங்களில் கட்டிவிடப்படும் கால்நடைகளை நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P