Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
சென்னை அடுத்த சேலையூர் ஜானகிராமன் தெருவைச் சேர்ந்த பாலாஜி (44) என்பவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அவரது கடையில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த ஜூலை 12ஆம் தேதி சேலையூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் சிறையில் இருந்த பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக சிறைக் காவலர்கள் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாலாஜி மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்றும், சிறையில் காவலர்கள் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்றும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P