Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 ஜூலை (ஹி.ச.)
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமிருன்னிசா பேகம் (வயது 42). ஒரு ஆன்லைன் மோசடி கும்பலிடம் இவர், ரூ. 6,08,956 பணத்தை இழந்ததாக மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின்படி, கடந்த ஏப்ரல் மாதம் PM MUDRA FINANCE என்ற நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் சில நபர்கள் அமிருன்னிசாவை தொடர்பு கொண்டு, ரூ. 1 லட்சம் கடன் வழங்குவதாக கூறியுள்ளனர். அதற்காக பிராசஸிங் கட்டணம் என்ற பெயரில் பல தவணைகளாக பணமும் பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் வசிக்கும் பிரபல யூடியூபர் எனக் கூறி ஒருவர் அமிருன்னிசாவை தொடர்பு கொண்டுள்ளார். அவர் 5,600 அமெரிக்க டாலர் அனுப்பியுள்ளதாகவும், அதை பெற ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனை அமிருன்னிசாவும் நம்பி, அவர் கூறிய வழிகாட்டு முறைகளை பின்பற்றியுள்ளார்.
அதன்படி, டாலரை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கும், வங்கிக் கணக்கை மாற்றுவதற்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், NBFC Lending Partners என்ற பெயரில் ரூ. 6 லட்சம் கடன் வழங்குவதாகவும், சிபில் (CIBIL) ஸ்கோர் சரியில்லை எனவும் கூறி பணம் பெற்றுள்ளனர்.
அதேபோல், Oxford Publication நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறலாம் என ஆசை காட்டியும் Processing Fees என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அமிருன்னிசா பேகம், தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் அளித்ததுடன், மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.
இதனையடுத்து, மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல்துறையினர் குற்ற எண் 63/2026-ஆக வழக்குப்பதிவு செய்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டம் பிரிவு 318(4) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN