மதுரையில் அடுத்தடுத்து பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை - மூன்று பேர் கைது
மதுரை, 15 ஜூலை (ஹி.ச.) மதுரை திருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனக்கன்குளம் சமாதானநகரைச் சேர்ந்த ஹரிணி என்பவர் கர்ப்பமாக இருப்பதால் தாயார் வீட்டில் தங்கி வந்த நிலையில், அவரது கணவர் கார்த்திக் கடந்த மே 19ஆம் தேதி வேலைக்காக வெளியூர் செல்லும் முன்
ThiruNagar Police Station


மதுரை, 15 ஜூலை (ஹி.ச.)

மதுரை திருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனக்கன்குளம் சமாதானநகரைச் சேர்ந்த ஹரிணி என்பவர் கர்ப்பமாக இருப்பதால் தாயார் வீட்டில் தங்கி வந்த நிலையில், அவரது கணவர் கார்த்திக் கடந்த மே 19ஆம் தேதி வேலைக்காக வெளியூர் செல்லும் முன் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஹரிணியிடம் ஒப்படைத்துள்ளார்.

மே 21ஆம் தேதி ஹரிணியின் மாமியார் ஜெயலெட்சுமி வீட்டிற்கு சென்றபோது, கிரில் கேட் மற்றும் பிரதான கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஹரிணி மற்றும் அவரது தாயார் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்ததுடன், பூஜை அறையில் இருந்த மரப்பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 5 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.29,500 ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஹரிணி அளித்த புகாரின் பேரில், திருநகர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 331(4), 305-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், தனக்கன்குளம் ஜெயம் நகரைச் சேர்ந்த சரண் (30) என்பவரின் வீட்டிலும் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். சரணின் பெற்றோர் டெல்லியில் இராணுவத்தில் மேஜராக பணியாற்றும் மகளைச் சந்திக்க கடந்த மே 6ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தனர். சரண் தனது குடும்பத்துடன் தொழில் காரணமாக எல்லீஸ்நகரில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

மே 21ஆம் தேதி மாலை வீட்டிற்கு சென்றபோது, முன்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால், வீட்டில் மதிப்புமிக்க பொருட்கள் இல்லாததால் எதுவும் திருடப்படவில்லை என தெரியவந்தது.

இதுகுறித்து சரண் அளித்த புகாரின் பேரில், திருநகர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் இந்திய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 331(4), 62-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி தீவிர தேடிவந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து 27, அஞ்சனை செல்வன் 23 திருநெல்வேலி சேர்ந்த முருகன் 30 ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை திருநகர் பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN