Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 15 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சபரி வர்மன், கடந்த ஜூலை 9 ஆம் தேதி நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் சிறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டது.
கூராய்வு அறிக்கையில், சபரி வர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிறைக்குள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
இதனை தொடர்ந்து தலைமைச் சிறைக் காவலர் சுரேஷ்
(என்ற திருமலை நம்பி), சிறை வார்டன் ஜெகன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் சிவகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கொலை, கொடூரமாகத் தாக்குதல், ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நேசமணி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜூலை 12 இரவு சிறைக்குள் அவர் சத்தம் போட்டதாகக் கூறி, இந்த வார்டன்கள் அவரைத் கயிற்றால் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சபரி வர்மனைத் தாக்கியதாகக் கூறப்படும் சக கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன் உள்ளிட்ட எட்டு கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b