Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், மதுவில்லா தமிழகத்தை படிப்படியாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசிய அவர், குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தர மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க புதிய அரசு செயல்படும் என்று நம்புகிறேன். 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த அரசுக்கு ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை அவகாசம் அளிக்க வேண்டும். அதற்குள் தேவையற்ற அரசியலை புகுத்தக் கூடாது என்று தெரிவித்தார்.
தொழிற்சாலை விபத்துகள் குறித்து கருத்து தெரிவித்த ஜி.கே. வாசன், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு, இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் அளிப்பவை. இருப்பினும், ஒவ்வொரு சம்பவத்தின் உண்மை நிலையும் விசாரணை மூலம் வெளிவர வேண்டும். உண்மை தெரியாமல் அரசியல் ரீதியாக கருத்து கூறக் கூடாது.
தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது,அதன் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ