Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
நாகர்கோவில் கிளைச்சிறையில் மாற்றுத்திறனாளி சபரிநாதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதைப்பாக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிநாதன், நாகர்கோவில் கிளைச்சிறையில் சிறைக்காவலர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சபரிநாதனின் மரணத்தை மாரடைப்பு எனக் கூறி மூடி மறைக்க முயற்சிகள் நடந்ததாகவும், பின்னர் நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற உடற்கூறாய்வில் அவரது உடலில் 19 காயங்கள் இருந்ததும், வலது கை மூன்று இடங்களில் உடைக்கப்பட்டிருந்ததும் உள்ளிட்ட பலத்த தாக்குதலுக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நாகர்கோவில் தலைமை சிறைக்காவலர் மற்றும் இரண்டு சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சிகள் நடந்ததாக குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், தமிழக காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, சாத்தான்குளம் ஜெயராஜ்–பெனிக்ஸ் வழக்கு மற்றும் மடப்புரம் அஜித்குமார் வழக்கைப் போலவே, சபரிநாதன் மரண வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சிறைக்காவலர்களுக்கு வழக்கு விசாரணை முடியும் வரை பிணை வழங்கக்கூடாது என்றும், சபரிநாதனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களில் காவல்துறை காவலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மரணங்கள் குறித்தும் தனித்தனி விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P