சபரிவர்மன் உயிரிழப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் – நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்
சென்னை, 15 ஜூலை (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நீலம் பண்பாட்டு மையம், இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில்
Neelam


Tt


சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நீலம் பண்பாட்டு மையம், இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன நீதிவிசாரணை நடத்த தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குட்கா வழக்கில் ஜூலை 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சபரிவர்மன், ஜூலை 13-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பின்னரும் விரைவில் ஜாமீனில் வெளியே வருவேன் என்ற நம்பிக்கையுடன் அவர் குடும்பத்தினரிடம் பேசியிருந்த நிலையில், சில நாட்களிலேயே உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக தெரிவித்துள்ளது.

மேலும், நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், காவல் மற்றும் சிறைக் காவலில் இருந்த ஒருவரின் உடலில் இத்தனை காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

சபரிவர்மனின் மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் என குற்றஞ்சாட்டி, அவரது குடும்பத்தினர் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள நீலம் பண்பாட்டு மையம், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்து, உண்மையை அரசு வெளிக்கொணர வேண்டும் என்று கோரியுள்ளது.

காவல் மற்றும் லாக்கப் மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மக்களிடையே அச்சத்தையும், காவல்துறை மற்றும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பாதிப்பதாகவும், சட்டத்தின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய குடிமக்கள் உயிரிழப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மரணத்திற்கு காரணமான அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சபரிவர்மனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது.

இறுதியாக, மனித உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழும் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அரசின் தலையாய கடமை என வலியுறுத்தியுள்ள நீலம் பண்பாட்டு மையம், இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ