Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 15 ஜூலை (ஹி.ச.)
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் பணியாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் மட்டும் தனியார் வங்கிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நிதித்துறையில் தனியார் வங்கிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. வேலைவாய்ப்பு வழங்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக உள்ள தனியார் வங்கிகளில் சுமார் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளின் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வருவதால், பணியாளர் நியமன முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கணக்கு பராமரிப்பு, ஆவண சரிபார்ப்பு, பரிவர்த்தனை செயல்பாடுகள் உள்ளிட்ட வழக்கமான பணிகள் தற்போது ஏ.ஐ. மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், இதுபோன்ற பணிகளுக்கான மனிதவளத் தேவை குறைந்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கி, கடந்த 9 ஆண்டுகளில் முதன்முறையாக தனது பணியாளர் எண்ணிக்கையை குறைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் அந்த வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை 3,343 குறைந்து, மொத்தம் 2.11 லட்சமாகியுள்ளது. அந்த வங்கியின் ‘நீவ்’ என்ற செயற்கை நுண்ணறிவு தளம் மூலம் பல வழக்கமான பணிகள் தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டதால், கீழ்நிலை பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆக்சிஸ் வங்கி புதிய கிளைகளை தொடங்கிய நிலையிலும், தொழில்நுட்ப முதலீடுகளின் காரணமாக அதன் பணியாளர் எண்ணிக்கை 3,100 வரை குறைந்துள்ளது.
தற்போது அந்த வங்கியில் 1.01 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
கோடக் மகேந்திரா வங்கியிலும் ஓராண்டில் 1,269 பணியாளர்கள் குறைந்துள்ளனர்.
பின்அலுவலகப் பணிகளை ஏ.ஐ. மற்றும் தானியங்கி அமைப்புகள் மேற்கொள்வதால், வங்கிகள் புதிய பணியாளர்களை விற்பனை, வாடிக்கையாளர் சேவை, ஆலோசனை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் அதிகமாக நியமித்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு காரணமாக வங்கி துறையில் பாரம்பரிய பணிகளின் தன்மை மாறி வந்தாலும், புதிய தொழில்நுட்ப திறன்களை கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA