Enter your Email Address to subscribe to our newsletters

பொள்ளாச்சி, 15 ஜூலை (ஹி.ச)
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில், ஆழியாறு வனப்பகுதிக்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக வளாகத்தில் அமைந்துள்ள கவி அருவி, குரங்கு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக விளங்கி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நீர்வரத்து வெகுவாக குறைந்ததாலும், பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாகவும், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிக தடை விதித்திருந்தது. இதேபோல் கோடை வறட்சி மற்றும் வெயிலின் தாக்கத்தால் அருவி மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பருவமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து சீராகியுள்ளது. நீர்வரத்து சீரானதும் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
அதன்படி, தடுப்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட பின்னர் இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டதை அறிந்து ஆழியார் அணை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கவி அருவிக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அதேவேளையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறையினரின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b