லாக்கப் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை, 15 ஜூலை (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை 9-ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஜூலை 13-ஆம் தேதி சி
Premalatha Vijayakant


Ggh


சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை 9-ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஜூலை 13-ஆம் தேதி சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கைது செய்யப்பட்டபோது ஆரோக்கியமாக இருந்த சபரிவர்மன், சில நாட்களில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்தை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம் என்றும், சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு, ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ