தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் - நடவடிக்கை எடுக்க கோரி மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம், 15 ஜூலை (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பும் பதட்ட
Fishermen Protest


ராமநாதபுரம், 15 ஜூலை (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

500க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியில் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பாரதி நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட கொல்லிமடி மீன் பிடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பதாகவும் இதுபோல தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தால் மீன்வளம் அழிந்து போகும் என்றும் கூறி அந்த தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்திய போது பாரதி நகர் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும், ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் பாரதி நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏர்வாடி தர்கா பகுதியை சேர்ந்த மீனவர்களை தாக்கியதாகவும் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட கொல்லிமடி வலைகளை பயன்படுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றும் , தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதை தட்டிக்கேட்ட மீனவர்களை தாக்கிய பாரதி நகர் பகுதி மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அதனைத் தொடர்ந்து மீன்துறை உதவி இயக்குனர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஆகியோரை சந்தித்து இது தொடர்பான புகார் அளித்தனர் .

500க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்தோடு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN