Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோரின் நலனை பாதுகாக்கவும், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது.
இந்த ஆணையம், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது, விதிகளை மீறும் கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது, வீடு வாங்குவோரின் புகார்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தலைவர் பதவி காலியாக இருந்து வந்த நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே. பணீந்தர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் இந்த முக்கிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பணீந்தர ரெட்டி, இதற்கு முன்பு தமிழக அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக இயற்கை வளத்துறை உள்ளிட்ட துறைகளில் அவரது பணி குறிப்பிடத்தக்கது.
அவரது நிர்வாகத் திறமையும், அனுபவமும் ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், ஆணையத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீடு வாங்குவோரின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் ஆணையம் செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b