ஆற்காடு அருகே ஏடிஎம்மில் ரூ.7 லட்சம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
ராணிப்பேட்டை, 15 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கலவை அடுத்த முள்வாடி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் வேளாண் கல்லூரி அருகே ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவில் பு
ஆற்காடு அருகே ஏடிஎம்மில் ரூ.7 லட்சம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு


ராணிப்பேட்டை, 15 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கலவை அடுத்த முள்வாடி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் வேளாண் கல்லூரி அருகே ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் பெட்டகத்தை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் ஏழு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஏடிஎம் இயந்திரம் கடந்த சில நாட்களாக பழுதடைந்திருந்ததால், வங்கி அதிகாரிகள் இதனை தற்காலிகமாக மூடி வைத்திருந்தனர்.

நேற்று மாலை பழுது நீக்கும் பணிக்காக ஊழியர்கள் வந்தபோதுதான், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலவை போலீசார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட உயர் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

ஏடிஎம் மையத்தின் வெளியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா வேலை செய்யவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், உள்ளே இருந்த கேமராவில் கருப்பு மையைப் பூசி தங்களின் அடையாளம் தெரியாதவாறு இக்கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை விரைந்து பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b