Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 15 ஜூலை (ஹி.ச)
திருவாரூர் மாவட்டம் மாங்குடி, மேல சாத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாங்குடி, மேல சாத்தங்குடி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மாங்குடி கடைவீதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த திடீர் சாலை மறியலால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b