Enter your Email Address to subscribe to our newsletters

சான் பிரான்சிஸ்கோ, 15 ஜூலை (ஹி.ச.)
அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் உள்ள பிரசித்தி பெற்ற அல்காட்ராஸ் தீவு அருகே 19 பயணிகளுடன் சென்ற மூன்றடுக்கு பொழுதுபோக்கு பான்டூன் படகு ஒன்று நேற்று திடீரென கவிழ்ந்து மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் கடலில் மாயமாகியுள்ளனர்.
அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இந்த விபத்து அல்காட்ராஸ் தீவில் இருந்து சுமார் 600 கெஜ தூரத்தில், கோல்டன் கேட் பாலத்திற்கும் தீவிற்கும் இடையிலான பகுதியில் நிகழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததும் அதில் இருந்தவர்கள் உதவிக்காக கதறியதை அடுத்து, அமெரிக்க கடலோர காவல்படை, சான் பிரான்சிஸ்கோ தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் 11 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விரிகுடாவின் கடும் குளிர்ந்த நீரில் மாயமான இருவரை தேடும் பணி இரவு வரை தீவிரமாக நடைபெற்றது.
விபத்தில் சிக்கிய 19 பேரில் 13 பேர் நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீரில் இருந்து மீட்கப்பட்ட ஒருவருக்கு மீட்பு குழுவினர் சிபிஆர் முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சான் பிரான்சிஸ்கோ தீயணைப்புத் துறை தலைவர் டீன் கிரிஸ்பென், படகு விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், படகில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
ஆரம்பத்தில் படகில் தீப்பிடித்ததாக பரவிய தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
வெளிப்பார்வைக்கு வானிலை அழகாகவும் அமைதியாகவும் காணப்பட்டாலும், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி அதன் வலுவான நீரோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
குறிப்பாக தற்போது தேசிய பூங்கா சேவை நிர்வாகத்தின் கீழ் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அல்காட்ராஸ் தீவைச் சுற்றியுள்ள நீர்ப்பகுதி மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b