மணப்பாறை அருகே ஊர் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு - பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்
திருச்சி, 15 ஜூலை (ஹி.ச) திருச்சி மாவட்டம் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள எப்.கீழையூர் கிராமம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கிராமம் ஆகும். இந்த கிராமம் எப்.கீழையூர் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நி
மணப்பாறை அருகே ஊர் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு - பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியலால் பரபரப்பு


திருச்சி, 15 ஜூலை (ஹி.ச)

திருச்சி மாவட்டம் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள எப்.கீழையூர் கிராமம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கிராமம் ஆகும்.

இந்த கிராமம் எப்.கீழையூர் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆவணங்களில் இந்த ஊரின் பெயர் அரியாகவுண்டம்பட்டி என மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊரின் பெயர் திடீரென மாற்றப்பட்டதால் பாஸ்போர்ட், ஆதார், நிலப்பட்டா, பத்திரம் உள்ளிட்ட அரசு ஆவணங்களிலும், பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதிலும் கடும் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக பழைய பெயரான எப்.கீழையூர் என்ற பெயரையே அரசு ஆவணங்களில் தொடர வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b