Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 16 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பொதுமக்களை குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி ஏடிஎம் கார்டை மாற்றி பணம் மோசடி செய்ய முயன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2019-ம் ஆண்டு சங்ககிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 20 அன்று, சேலம் மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்ற கட்டிடத் தொழிலாளியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி இந்த கும்பல் பணத்தை எடுக்க முயன்றபோது காவல்துறையினரால் முதன்முதலில் கைது செய்யப்பட்டது.
ஜாமீனில் வெளிவந்த இவர்கள், அதன் பின்னர் தொடர்ச்சியாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், தலைமறைவாக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுனில்குமார் (36), ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மணி (39) மற்றும் மஞ்சுநாத் (39) ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 வெளிமாநிலக் குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு மாநிலங்களில் தேடி வந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் சங்ககிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர்கள் வேறு ஏதேனும் ஏடிஎம் மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b