சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை- 11 நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து நீக்கம்
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 முக்கிய நிர்வாகிகளை அவர்கள் வகித்
Cves


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 முக்கிய நிர்வாகிகளை அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக சில அதிமுக நிர்வாகிகள் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், அவர்கள் மீது கட்சித் தலைமையால் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், மயிலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மேலும் தீவிரமடைந்துள்ளது.

சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக சி.வி. சண்முகம் செயல்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி ஏற்கனவே பறிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் தனி அணியாக செயல்பட்டு வருவதாகவும், தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக நகர வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, சி.வி. சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 முக்கிய மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திண்டிவனம், வல்லம், செஞ்சி, மயிலம், ஒலக்கூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்களும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் உள்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P