ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பு விவகார சிக்கலைக்கூட தீர்க்க முடியவில்லையா?- தவெக அரசை விமர்சித்த சீமான்
சென்னை, 16 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை திறப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இத
சீமான்


சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை திறப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அம்பேத்கர் சிலை கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் வடிவில் இருப்பதை காரணமாகக் கொண்டு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல,ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட மாபெரும் சிந்தனையாளர், கல்வியாளர் மற்றும் சமூகப் புரட்சியாளர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளுக்காக அம்பேத்கர் போராடியதாகவும், அவரைப் பற்றிய தவறான புரிதலே தற்போதைய சர்ச்சைக்கு காரணம் என்றும் சீமான் கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை ஐந்து ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பது வெட்கக்கேடானது என்றும், முந்தைய திமுக ஆட்சியும், தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தில் எழுந்துள்ள சமூகப் பதற்றத்தைக் கூட தீர்க்க இயலாத அளவுக்கு தவெக அரசு திராணியற்றுப் போய்விட்டதா? இதுதான் கொள்கைத் தலைவர் அம்பேத்கர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுத்து, சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தவெக அரசை நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam