காவலர் ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் -  அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 16 ஜூலை (ஹி.ச) தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டில் காவலர் ஆள்தேர்வு நடைபெறாது என்றும், 2027 ஜூன் மாதத்தில் தான் புதிய ஆள்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்
Anbumani


சென்னை, 16 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டில் காவலர் ஆள்தேர்வு நடைபெறாது என்றும், 2027 ஜூன் மாதத்தில் தான் புதிய ஆள்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்திருப்பது, காவலர் பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பணிகளை வலுப்படுத்த அதிகளவில் காவலர்கள் தேவைப்படுவதாகவும், தற்போது உள்ள காவலர் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும் என்ற ஐ.நா. பரிந்துரையை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 60 ஆயிரம் கூடுதல் காவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 3,000 முதல் 4,000 காவலர்கள் ஓய்வு பெறும் நிலையில், ஆண்டுதோறும் காவலர் ஆள்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் தேர்வு நடைமுறைகள் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், 2025-ஆம் ஆண்டுக்கான காவலர் தேர்வின் இறுதி முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், 2026-ஆம் ஆண்டுக்கான காவலர் ஆள்தேர்வு அறிவிப்பை வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அது சாத்தியமில்லையெனில், காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ