திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் புதிய சாதனை - ஒரே நாளில் ரூ.97 கோடி நன்கொடை
திருமலை , 16 ஜூலை (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமான திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வரலாற்றில் புதிய சாதனை ஒன்று பதிவாகியுள்ளது. ஒரே நாளில் பக்தர்களிடம் இருந்து ரூ.96.98 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. நன்கொடையாளர்களுக்கு வழங்கப்
A


திருமலை , 16 ஜூலை (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமான திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வரலாற்றில் புதிய சாதனை ஒன்று பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் பக்தர்களிடம் இருந்து ரூ.96.98 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.

நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசன சலுகைகள் தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக TTD அறிவித்ததை தொடர்ந்து, பழைய விதிமுறைகளின் கீழ் கிடைக்கும் சலுகைகளை பெறுவதற்காக பக்தர்கள் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கினர்.

இதனால் அறிவிப்பு வெளியான 10 மணி நேரத்திற்குள் மட்டும் ரூ.97 கோடிக்கு அருகில் நன்கொடை குவிந்தது.

TTD அறங்காவலர் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன வசதிகளை முறைப்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

புதிய விதிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் பழைய விதிகளின் கீழ் கிடைக்கும் சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்காக ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் நன்கொடைகளை செலுத்தினர்.

இந்த நன்கொடைகள் மூலம் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது TTD வரலாற்றில் இதுவே முதல் முறை என்று TTD தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.

ஏழுமலையான் மீது பக்தர்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இது சான்று என கூடுதல் செயல் அலுவலர் சி.எச். வெங்கையா சவுத்ரி கூறினார்.

மொத்தம் 2,460 பக்தர்கள் இந்த நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இதில் 1,212 பேர் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், 1,246 பேர் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலும் நன்கொடை அளித்துள்ளனர். மேலும் 2 பக்தர்கள் தலா ரூ.1 கோடி வீதம் நன்கொடை வழங்கியுள்ளனர்.

பெறப்பட்ட நன்கொடைகளில் 2,354 தொகைகள் ஆன்லைன் வங்கி மற்றும் பிற இணையதள வழிகளிலும், 106 தொகைகள் நேரடி கவுண்டர்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன.

கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் முதல் 2025-ம் ஆண்டு அக்டோபர் வரை TTD-க்கு ரூ.918.6 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ஒரே நாளில் ரூ.96.98 கோடி கிடைத்திருப்பது பக்தர்களின் ஏழுமலையான் மீதான ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், ஸ்ரீ வெங்கடேஸ்வரர் அன்னதான திட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக மற்றும் சேவைப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA