Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 16 ஜூலை (ஹி.ச.)
காப்பு சமூக தலைவரும் முன்னாள் அமைச்சருமான முத்திரகடா பத்மநாபத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் காவல்துறை பணிக்கு இடையூறு செய்ததாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கூட்டணி அரசு தன்னை தனிப்பட்ட முறையில் குறிவைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், காப்பு சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறினார்.
இது குறித்து அம்பட்டி ராம்பாபு தனது அறிக்கையில் கூறியதாவது:-
முத்திரகடா பத்மநாபம் உயிருடன் இருந்தபோது அவரை பல்வேறு வகையில் துன்புறுத்தினர்.
தற்போது அவர் மறைந்த பிறகு அரசு மரியாதை வழங்குவதாக கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது. அரசு மரியாதை வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
அவர்கள் மறுத்தும் காவல்துறையினர் ஏன் வந்தனர்?முத்திரகடா பத்மநாபத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவே காவல்துறையை தடுத்தோம். இதில் எந்த தவறும் இல்லை. இதற்காக என் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அஞ்ச மாட்டேன்.
முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் டிஜிபி ஆகியோர் என்னை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகின்றனர். மாநிலத்தில் எந்த சிறிய சம்பவம் நடந்தாலும் என் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.
இதற்கு முன்பும் அமராவதி சென்றபோதும், ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்தபோதும் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.என் மீது 100 வழக்குகள் போட்டாலும் பயப்பட மாட்டேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாண் குறித்து அம்பட்டி ராம்பாபு கூறுகையில், “தான் காப்பு சமூகத்தின் பிரதிநிதி இல்லை என்று பவன் கல்யாண் கூறியிருந்தால், அவர் இன்னும் கூட்டணி அரசில் ஏன் தொடர்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டணி அரசின் நடவடிக்கைகளால் காப்பு சமூகத்தினர் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA