Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
நிதிமுறைகேடு மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பணியாளர்களை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் மண்டல சுகாதார அதிகாரி தேவிகலா, மூத்த பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி, உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ், சாலைப் பணியாளர் பாஸ்கர் மற்றும் பில் கிளார்க்குகள் துர்கா, கண்ணன் ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் மீது, நிதி முறைகேடு, அரசுப் பணியில் சேர்த்துத் தருவதாகக் கூறி பணம் வசூலித்தது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களின் அடிப்படையில் துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 பேரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam