பணி நிரந்தரம் கோரி வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
திருவள்ளூர், 16 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல் மின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டு, வடசென்னை – 3 ஆகியவற்றின் மூலம், தினமும் 2,630 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
பணி நிரந்தரம் கோரி வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்


திருவள்ளூர், 16 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல் மின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டு, வடசென்னை – 3 ஆகியவற்றின் மூலம், தினமும் 2,630 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு, 1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் இந்த மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தங்களை, தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தொழிலாளர்கள் அனல் மின் நிலையத்தின் நுழைவாயில் மற்றும் அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் தொடர்ச்சியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

அந்த வகையில் தங்களது கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிசாய்க்காததை அடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தொடர்ந்து உழைத்து வந்த போதிலும், தங்களுக்கு உரிய ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:

புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ளது. அதில், வடசென்னை அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும், தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால், அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b