Enter your Email Address to subscribe to our newsletters

ஆரணி, 16 ஜூலை (ஹி.ச)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நல்லவன்பாளையத்தை சேர்ந்த சந்திரகுமார் மற்றும் அவரது மனைவி சிந்து இருவரும் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சந்திரகுமாரின் நுரையீரல் தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டு ஊர் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று வடமாதிமங்கலம் ரயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வடமாதிமங்கலம் ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதி எதற்காக தண்டவாள பகுதிக்கு வந்தனர், இது எதிர்பாராத விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b