Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 16 ஜூலை (ஹி.ச.)
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் தற்போதுள்ள பேருந்து நிலையம் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான இடம் தேர்வு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் கீழ் திருச்செந்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருச்செந்தூர் நகரின் விரிவாக்கத்தையும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதியையும் கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையத்தை கீழ் திருச்செந்தூரில் உள்ள மாட்டுத்தாவணி பகுதியில் அமைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த இடத்தில் போதிய அரசு புறம்போக்கு நிலம் உள்ளதாகவும், அங்கு அமைத்தால் நகரின் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்க முடியும் என்றும் அவர் வாதிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா, அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, மாட்டுத்தாவணி பகுதியில் அமைப்பது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை சில வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b