Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஜூலை (ஹி.ச)
கோவில் நிலங்களைச் சூறையாடியவர்கள் சுதந்திரமாக உலா வருவதாகவும், அவர்களுக்கு பின்னணியாகச் செயல்பட்ட நபர்கள் மற்றும் விதிமீறி பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில், கோவில் சொத்துகள் தொடர்பான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட ஒரு சாதாரண குடிமகனை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியை விமர்சிப்பவர்களை காவல்துறையின் மூலம் அடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஊழல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சரிசெய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், விமர்சனக் குரல்களை ஒடுக்க முயன்றால் அதற்கு மக்கள் ஜனநாயக ரீதியாக பதிலளிப்பார்கள் என்றும் திமுக தனது பதிவில் தெரிவித்துள்ளது.
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; தமிழக அரசின் ஊழல், லஞ்சம் மற்றும் நிர்வாகத் திறன் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என்றும் திமுக தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ