Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 16 ஜூலை (ஹி.ச.)
முதல்வர் விஜய் தனது ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே மேடைகளில் பேசுகிறார். பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக அவர் குரல் கொடுப்பதாக தெரியவில்லை.
லாக்கப் மரணம் போன்ற முக்கிய விவகாரங்களிலும் அவர் மௌனம் காப்பது வேடிக்கையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சரும் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கர் விமர்சித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள சா.சி.சிவசங்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைய ஆட்சி அமைந்ததே ஒரு மோசமான சூழ்நிலையில் ஏற்பட்டதாகக் கூறிய அவர், முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு பெயர் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டி தங்களது திட்டங்களாக தற்போதைய அரசு விளம்பரப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுகவை பலவீனப்படுத்தி, அந்தக் கட்சியை கைப்பற்றும் நோக்கில் ஆளுங்கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக அரசின் திட்டம் என்றும், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்கான இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும் குறிப்பிட்ட அவர், அவற்றை தற்போதைய அரசு தனது சாதனையாகக் காட்ட முயற்சிப்பதாக விமர்சித்தார்.
கரூரில் முதல்வர் வழங்கிய அரசுப் பணி நியமன ஆணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இதுபோன்ற கோரிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் பாஜக நேரடியாக வலுப்பெற முடியாத சூழலில், அந்தக் கட்சி புதிய அமைப்புகள் மூலம் செயல்பட முயற்சிக்கிறது என்றார்.
இடதுசாரி கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவர்கள் திமுகவுடன் இருந்த நெருக்கம் போல் தற்போதைய ஆட்சியுடன் இல்லை என்றும், அவர்கள் எதிர்பார்த்த ஆட்சியாகவும் இது இல்லை என்றும் கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவனின் இருதுருவ போட்டி குறித்த கருத்து, திமுக - த.வெ.க. இடையேயான போட்டியை உறுதிப்படுத்துவதாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முந்தைய ஆட்சியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட சம்பவங்களின் போது அப்போதைய முதல்வர் தனது வருத்தத்தையும் கருத்தையும் தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய முதல்வர் ரசிகர்களுக்காக மட்டுமே மேடைகளில் பேசுகிறார். பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. அண்மையில் நடந்த லாக்கப் மரணம் தொடர்பாகவும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
'சாரி சொல்லாதீங்க... நீதி கொடுங்க' என்று முந்தைய ஆட்சியை விமர்சித்தவர், தற்போது மௌனம் காப்பது வேடிக்கையாக உள்ளது என்று சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam