புதுக்கோட்டையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு - வெயிலால் விளைச்சல் சரிவு
புதுக்கோட்டை, 16 ஜூலை (ஹி.ச) புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பூக்களின் விளைச்சல் கடுமையாக சரிந்துள்ளதால், மலர் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதே இந்த விலை உயர்வ
புதுக்கோட்டையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு - வெயிலால் விளைச்சல் சரிவு


புதுக்கோட்டை, 16 ஜூலை (ஹி.ச)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பூக்களின் விளைச்சல் கடுமையாக சரிந்துள்ளதால், மலர் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை நகரில் உள்ள மலர் சந்தை மற்றும் ஏலக் கடைகளில் வழக்கத்தை விட பூக்களின் வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்றைய சந்தை நிலவரப்படி மங்கள நிகழ்வுகளில் முதலிடம் பிடிக்கும் மல்லிகைப்பூ ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், சாமந்திப்பூ கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ரோஜாப்பூ கிலோ 200 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பூச்செடிகள் கருகி, மொட்டுகள் வைப்பது குறைந்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் வழக்கமாக வரும் பூக்களின் வரத்து பாதியாகச் சரிந்துள்ளது.

வரத்து குறைந்தாலும் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் தேவைகள் அதிகமாக இருப்பதால், சில்லறை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பதால் விலை எகிறியுள்ளது.

வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் பூக்களின் வரத்து மேலும் குறைந்து விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்களும், கோயில் நிர்வாகத்தினரும், விழா நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b