குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி சிறையில் உயிரிழப்பு - சேலையூர் காவல் நிலையம் முற்றுகை
செங்கல்பட்டு, 16 ஜூலை (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரைச் சேர்ந்த பாலாஜி, 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அ
பலி


செங்கல்பட்டு, 16 ஜூலை (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரைச் சேர்ந்த பாலாஜி, 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறையில் இருந்த பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, ஏராளமானோர் சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பாலாஜியின் உயிரிழப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காவல் நிலையம் முன்பு பதற்றமான சூழல் நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பாலாஜியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், விசாரணையில் காவல்துறையினரின் அலட்சியம் அல்லது தவறு உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதையடுத்து, காவல்துறையின் உறுதியை ஏற்றுக்கொண்ட பாலாஜியின் உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றதுடன், உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளவும் சம்மதம் தெரிவித்தனர்.

உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு பாலாஜியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சேலையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam