Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 16 ஜூலை (ஹி.ச.)
கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில், மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மலைபோல் குவிந்து கிடக்கும் இந்தக் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவி, குப்பைக் குவியல்கள் முழுவதும் எரியத் தொடங்கின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், குப்பைக் குவியல்கள் அதிகளவில் இருப்பதால் தீயை முழுமையாக கட்டுப்படுத்துவதில் சிரமம் நீடித்து வருகிறது.
தீ விபத்தால் உருவான அடர்ந்த புகைமூட்டம் காரணமாக வாங்கல் சாலை வழியாக நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலர் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டதுடன், பார்வைத்திறன் குறைந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மேலும், குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை பிரித்து அகற்றினால் மட்டுமே தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P