எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என பா.ஜ.க. ஆசைப்படுகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
கொல்கத்தா, 16 ஜூலை (ஹி.ச.) மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தனது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதள நேரலையில் பேசியபோது, பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேற்கு வங்காள அரசி
A


கொல்கத்தா, 16 ஜூலை (ஹி.ச.)

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தனது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதள நேரலையில் பேசியபோது,

பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேற்கு வங்காள அரசியலில் தீவிரமான தலைவராக திகழும் மம்தா பானர்ஜி, 2007-ம் ஆண்டு நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் மூலம் மாநில அரசியலில் தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.

'மா, மாட்டி, மனுஷ்'

(தாய், தாய்மண், மக்கள்) என்ற முழக்கத்துடன் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று, மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

அதன்பிறகும் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் நேரலையில் பேசினார்.

அப்போது,

எனது உடல்நிலை குறித்து திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி, எனது ஆதரவாளர்களை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர்.

எனக்கு எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லை. மக்களின் ஆசியும் ஆதரவும் இருக்கும் வரை என்னை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என்று பா.ஜ.க. ஆசைப்படுகிறது. ஆனால் அவர்களின் அரசியல் முடிவைப் பார்க்கும் வரை நான் உயிருடன் இருப்பேன்.

பா.ஜ.க.வின் வீழ்ச்சியை நேரில் காணும் வரை எனது அரசியல் போராட்டம் ஓயாது என்று தெரிவித்தார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கும் பா.ஜ.க.வே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மம்தா பானர்ஜியின் இந்த கருத்துகள் தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA