Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 16 ஜூலை (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் அருகே கர்த்தக்கல் முனியப்பன் கோயில் பகுதியில் நேற்றிரவு 7:52 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதி்ர்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமியின் அடிபரப்பில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நில அதிர்வு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) வழிகாட்டுதல்களின்படி, ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகும் நில அதிர்வுகளால் கட்டிடங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
இது பூமியின் உள்அமைப்பில் ஏற்படும் மிகச் சாதாரணமான ஒரு சிறிய அழுத்த வெளியீடு மட்டுமே.
எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்களை மத்திய அரசின் நில அதிர்வு அறிவியல் மைய இணையதளம் (www.seismo.gov.in) அல்லது *'BhooKamp'* செயலி வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.
பாதுகாப்பாக இருப்போம், விழிப்புடன் இருப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN