Enter your Email Address to subscribe to our newsletters


கும்பகோணம், 16 ஜூலை (ஹி.ச)
2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தமிழகத்தின் கல்வி வரலாற்றில் மிகப்பெரிய சோக நிகழ்வாகப் பதிவான இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் நினைவு நாளையொட்டி, தமிழக வேளாண்துறை அமைச்சர் கும்பகோணம் வினோத் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
ஒரே நாளில் எண்ணற்ற கனவுகளும், பிஞ்சு சிரிப்புகளும் நெருப்பில் கருகிய துயர நாளை யாராலும் மறக்க முடியாது.
2004-ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த அன்பு சகோதர, சகோதரிகளின் நினைவு நாளில், அவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்களை இழந்து இன்றும் வேதனையுடன் வாழும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் துயரில் நானும் பங்கெடுக்கிறேன்.
அந்த நினைவு என்றும் நம் நெஞ்சங்களில் வாழும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்திய முக்கிய சம்பவமாகக் கருதப்படுகிறது.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பு, தீயணைப்பு வசதிகள், அவசரகால வெளியேற்ற நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ஆம் தேதி, கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் அமைச்சர் கும்பகோணம் வினோத் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் குடும்பத்தினரின் துயரிலும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ