Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 16 ஜூலை (ஹி.ச.)
கடும் வறட்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பரப்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 91 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வெறும் 64 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 66 சதவீதம் சரிவாகும்.
இதே நிலை தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் நீடிக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி பரப்பு பாதிக்கு மேல் சரிந்துள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் டெல்டா விவசாயிகள் வயல்களை உழுது, பரம்படித்து தயார் நிலையில் வைத்திருந்தனர்
இதற்காக பல ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி அணை திறக்கப்படாததால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள டெல்டா விவசாயிகள் கடனில் மூழ்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விதை, உரம், உழவு செலவுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரசு உரிய இழப்பீடு வழங்குவதோடு, மாற்று பயிர் சாகுபடிக்கு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b