Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 16 ஜூலை (ஹி.ச.)
தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில், அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம், ஒண்ணாம் மயில், வள்ளியகண்டம், மன்னாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், குடியிருப்புகள் மற்றும் பொது கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப் பெரியாற்றில் நேரடியாக கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். ஆனந்த், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மான் ஜோசப்பை தொடர்புகொண்டு, முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த சூழலில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அதிகாலை குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம் மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தென் தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை நீரில், வீடுகள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் பொது கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பது மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்தார்
எவ்வித மனசாட்சியும் இல்லாமல் குடிநீரில் எப்படி கழிவு நீரை கலக்க மனம் வந்தது என்றும், இந்த நீரை தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவ்ர கூறினார்.
இதனால் பொதுமக்களின் உடல்நலன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு தலைமதகு பகுதியில் உள்ள குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டுகளாக ஆற்றில் கலப்பதை கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் சென்றதால் தான் இந்த நிலை இன்று ஏற்பட்டுள்ளது
தமிழகத்திற்கு வரும் ஆற்று நீர் மாசடைந்து கழிவுநீராக மாறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN