Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 16 ஜூலை (ஹி.ச.)
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனியார் நபர்களின் பெயருக்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ளதுடன், பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பழனி அடிவாரம் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், வழக்கின் தீவிரம் மற்றும் பரபரப்பை கருத்தில் கொண்டு, தமிழக டிஜிபி உத்தரவின்படி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக அப்போதைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரை பணியில் அமர்த்தியதாக கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய நிலப்பதிவை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய அனைத்து நபர்களின் பங்கும், போலி ஆவணங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதையும் சிபிசிஐடி அதிகாரிகள் விரிவாக விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam