Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
காமராஜர் சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், அரசு விக்டோரியா மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதியில் சத்தான மற்றும் தரமான உணவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில்,
கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது விடுதிக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற தரமான உணவு வழங்கப்படவில்லை என்றார்.
கல்வியாண்டு தொடங்கிய நாள் முதலே தரமான உணவு வழங்கக் கோரி வலியுறுத்தி வருவதாகவும், தரமற்ற உணவு காரணமாக மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தனியாக அழைத்து பேசியதாகவும், போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதி நிர்வாகம் தரமான உணவு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், புதிய உணவுப் பட்டியலையும் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில், மற்றொரு தரப்பு மாணவர்கள் விடுதியில் தரமான உணவுதான் வழங்கப்படுகிறது என்றும், தேவையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் கூறி தனியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரே வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களும் மாறுபட்ட கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், இரு தரப்பு மாணவர்களிடமும் நேரில் பேசி அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளதாகவும், விடுதி அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களின் முரண்பட்ட போராட்டத்தால் மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ