Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 16 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து புறப்பட்டு சென்ற பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி.) பஸ்சில், கண்டக்டரின் பணப்பையை திருடியதாக கூறப்படும் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவத்தன்று பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கண்டக்டர் டிக்கெட் விற்பனையில் வசூலான பணத்தை ஒரு பணப்பையில் வைத்து, டிரைவர் இருக்கை அருகே உள்ள என்ஜின் மீது வைத்துவிட்டு, மற்ற பயணிகளுக்கு கியூ.ஆர். கோடு கருவி மூலம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்குவதில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர், கண்டக்டர் கவனிக்காத நேரத்தில் பணப்பையை எடுத்து தனது கைப்பையில் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் டிக்கெட் வழங்கிவிட்டு திரும்பி வந்த கண்டக்டர், பணப்பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பயணிகளிடம் விசாரித்தபோது, அந்த பெண் என்ஜின் அருகே வந்திருந்தது தெரியவந்தது.
இதனால் சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணிடம் கண்டக்டர் விசாரித்தார்.
ஆனால், தாம் பணப்பையை எடுக்கவில்லை என்று அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து டிரைவர், பஸ்சில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்.
அவர் அந்த பெண்ணின் கைப்பையை சோதனையிட்டபோது, கண்டக்டரின் பணப்பை அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், யாரோ எனக்குத் தெரியாமல் பணப்பையை என் பையில் வைத்துவிட்டார்கள் என்று அந்த பெண் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
மேலும், தன்னை விடுவிக்குமாறு டிரைவரிடம் கெஞ்சிய அவர், தனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தன்னை நம்பி குழந்தைகள் இருப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காமல், கண்டக்டர், டிரைவர் மற்றும் பெண் போலீஸ் அதிகாரி இணைந்து அந்த பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து, சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA