Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 16 ஜூலை (ஹி.ச)
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத பூஜையை முன்னிட்டு இன்று திறக்கப்படுகிறது.
தமிழ் மாதமான ஆடியும், மலையாள மாதமான கற்கிடகமும் ஒரே காலத்தில் வருகிறது.
இதையொட்டி ஒவ்வொரு மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் நடைபெறும் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கற்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று ஜூலை 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று மாலை தந்திரி கண்டரரு ரமேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி சன்னிதானத்தின் நடையை திறந்து தீபம் ஏற்றுவார்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தொடங்கும். நாளை ஜூலை 17 ஆம் தேதி கற்கிடகம் முதல் நாள் என்பதால் அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகள், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த மாத பூஜை காலத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக மெய்நிகர் வரிசை முறையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.
கற்கிடக மாத பூஜைகள் நிறைவடைந்து வரும் ஜூலை 21 ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும். மேலும் இந்த ஜூலை மாதத்தில் நவகிரக பிரதிஷ்டை மற்றும் நிறைபுத்தரி பூஜைகளுக்காகவும் கோவில் நடை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b